தமிழ்நாடு நாள்

  1. முகப்பு
  2. தமிழ்நாடு நாள்

தமிழ்நாடு நாள் - மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய” - சிலப்பதிகாரம் - வஞ்சிக் காண்டம்.

'நும் நாடு யாதெனில் தமிழ்நாடு என்றல்' - இளம்பூரணர் தொல்காப்பிய உரை.

ஐம்பதாயிரம் ஆண்டுகள் மூத்த இனமான தமிழினம் நிலைத்து வாழ்ந்த நிலப்பரப்பு "தமிழ்நாடு" என்கிற பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வருகிறது.

பண்டைய காலத்தில் குமரிக்கண்டம் தமிழ்நாடாக விளங்கியது. பிறகான காலத்தில் இன்று சிந்து சமவெளி என்றழைக்கப்படும் நிலப்பரப்பில் தமிழர்கள் தான் வாழ்ந்துள்ளார்கள். அதற்குப் பிந்தைய காலத்தில் ஆரியப் படையெடுப்பிற்குப் பின், ஆரிய மொழிக் கலப்பினால் தமிழ் திரிந்து பிற தமிழிய மொழிகளாக உருவான பின்பு, தமிழர்கள் வாழ்ந்த நிலப்பரப்புச் சுருங்கி, வட வேங்கடம், தென் குமரி என்றானது. இதைத் தான் தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்" என்று தமிழர்களின் நில எல்லைகளைச் சுட்டிக் காட்டுகிறார்.

ஆங்கிலேயர்கள் இங்கு வந்தேறியப் பிறகு அவர்களின் வணிக நோக்கத்திற்காகத் துறைமுகம் கொண்ட ஒரு நகரமான சென்னையை 1641-இல் மதராசப்பட்டினம் என்று அவர்களின் வணிகத் தலைநகராகக் கட்டி எழுப்பினர். அதையே 1652-இல் விரிவுபடுத்தி, மதராச மாகாணம் (Madras Presidency) என்று ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பாக மாற்றப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், இன்றைய தமிழ்நாடு, ஆந்திரா, ஐதராபாது தவிர்த்த இன்றைய தெலங்கானா, ஓடியாவின் தெற்கெல்லைப் பகுதிகள், மைசூரு அல்லாத கர்நாடகம், திருவானந்தபுர சமசுதானதாம் அல்லாத கேரளம் என்கிற அனைத்து நிலப்பரப்புகளும் மதராச மாகாணமாக விளங்கியது.

இந்தியா விடுதலைப் பெறும் சூழல் அமையும் போது ஒடிய மக்கள் தங்கள் மொழிக்கான முதன்மைத்துவம் இல்லாததை எதிர்த்துத் தனி மொழிவழி மாகாணம் கேட்டுப் போராடினர். அதற்குப் பிறகு தெலுங்கர்கள் தங்களுக்கும் மொழிவழி மாகாணம் வேண்டும் என்று போராடத் தொடங்கினர். அதன் உச்சமாக மதராசு (சென்னை) நகரைத் தங்களுக்கு வேண்டும் என்று போராடி பொட்டி சிறிராமுலு சென்னையின் மயிலாப்பூரிலேயே உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார். இதன் விளைவாக அன்றைய இந்தியாவின் முதன்மை அமைச்சர் நேரு ஆந்திராவைத் தனி மாநிலமாக அறிவித்து, எல்லைகளை வரையறைச் செய்யக் குழு அமைத்தார். அந்தக் குழு ஆய்வு செய்து, அதில் பல சதிகளையும் செய்து, தமிழர்களின் நிலப்பரப்பான சித்தூர், நெல்லூர், திருப்பதி, பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம், வெங்காலூர் (பெங்களூரு), குடகு (கூர்கு), கோலார் போன்ற பகுதிகளைத் தமிழகத்திலிருந்து பிரித்து மொழிவழி அமைந்த மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேராளாவுடன் இணைத்தனர். இதனால், வட வேங்கடம் உட்படத் தமிழர்கள் நிலைத்து வாழ்ந்த நிலப்பரப்புகளை இழந்த தமிழ்நாடாக இன்று சுருங்கியுள்ளது. இந்த மொழி வழி மாநிலப் பிரிப்பு அலுவல் நிலையில் அறிவிக்கப்பட்டுச் செயல்படத் தொடங்கிய நாள் தான் நவம்பர் 1, 1956.

நிலப்பரப்புகளை இழந்தாலும், மொழிவழி மாநிலமாக அமைவதால் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் முதன்மைத்துவம் இருக்கும், உரிமைகள் காக்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த தமிழர்களுக்குக் கடந்த 75-ந்து ஆண்டுக் கால ஒன்றிய அரசின் செயல்பாடுகளும், 55-ந்து ஆண்டுக் காலத் திராவிட ஆட்சிகளும் பெருத்த ஏமாற்றமாகவே இருக்கிறது.

"இந்திய மொழிகளின் தொன்மையைத் தமிழிலிருந்து அறியலாம்", "உலகின் மிக மூத்த மொழி தமிழ். அது இந்தியாவில் இருப்பது எங்களுக்குப் பெருமை" என்றெல்லாம் உலகரங்கில் முழங்கும் மோடி அவரின் ஆட்சிக் காலத்தில் இந்தியையும் சமசுகிருதத்தையும் வளர்க்க எடுத்த முயற்சிகளில் எள்ளளவும் தமிழை வளர்க்க முனையவில்லை என்பதே உண்மை. "தமிழ் வாழ்க, தமிழ் வளர்க" என்று கூக்குரலிட்ட திராவிட ஆட்சியாளர்களும் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தையே அனைத்து இடங்களிலும் நிலைபெறச் செய்துவிட்டனர்.

இந்நிலையில் இன்று இந்தி மொழியை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் வேலைகளில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது.

இருப்பதைக் காத்து இழந்ததை மீட்க, தமிழ் மக்களுக்கு மொழி உணர்வையும் இன உணர்வையும் ஊட்ட வேண்டியது அடிப்படைத் தேவையாகிறது.

ஈழ இனவழிப்பிற்குப் பின் இதைத் தான் "நாம் தமிழர் கட்சி" தமிழ்நாட்டில் செய்து வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்கதையாகிப் போயுள்ள வளக் கொள்ளை, உரிமைப் பரிப்பு, வடவர் குடியேற்றம், கட்டாய இந்தித் திணிப்பு போன்றவற்றை எதிர்த்துத் தொடர்ந்து களமாட வேண்டிய சூழலில் தான் "நாம் தமிழர் கட்சி" இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு மொழி வழி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ஐ "தமிழ்நாடு நாள்" என்று கடந்த சில ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறோம்.

இவ்வாண்டு மேல்குறிப்பிட்டக் காரணிகளைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியும், அதைத் தொடர்ந்து மாபெரும் பொதுக்கூட்டமும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றைச் சீரும் சிறப்புமாக நடத்தப் பெரும் பொருளாதாரம் தேவைப்படுகிறது. தமிழ்-தமிழர் உரிமை மீட்கத் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் தங்களால் இயன்ற பங்கேற்பை உறுதி செய்து, பொருளாதாரப் பங்களிப்பையும் நல்குமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.

- செந்தமிழன் சீமான்