தென் மாவட்டங்களில் அதி கனமழை பெருவெள்ளப் பாதிப்பினால் கொடுந்துயருற்றுள்ள நம் உறவுகள் மீண்டுவர துணைநிற்போம்!
கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில் தாமிரபரணி, மணிமுத்தாறு, பேச்சுப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் உள்ளிட்ட அனைத்து முக்கிய அணைகளும் நிரம்பி வழிகின்றன. நான்கு மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன. பல நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் முற்றிலுமாகத் தடைப்பட்டுள்ளதால் தென் மாவட்டங்கள் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளன. ஆறுகள் உடைப்பெடுத்து, தரைப்பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல கிராமங்கள் தனித்தீவுகளாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்து கிடப்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை இருக்கிறது.
தென் மாவட்டங்களின் அனைத்துக் குளங்களும், கால்வாய்களும் நிரம்பி பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி, நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சிறு-குறு தொழிற்கூடங்கள், கடைகள் உள்ளிட்டவை வெள்ளநீர் புகுந்ததால் பெரும் பொருட்சேதத்திற்கு ஆளாகியுள்ளது.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குப் போதிய உணவு, குடிநீர், மருந்துகள், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை. மழை வெள்ளத்தால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்ளாத முடியாத நிலையில், அரசும் எவ்விதத் துயர் துடைப்பு உதவிகளும் செய்யாதிருப்பதால் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் பசியால் வாடும் கொடுஞ்சூழல் நிலவுகிறது.
ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்பட்டப் பிறகுதான், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றுமென்றால், அது அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியமும்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. எனவே, அரசை மட்டுமே நம்பியிராமல், தற்சமயத்தில் எல்லோரும் இணைந்து செயலாற்றினால்தான், இப்பேரிடலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும் என்பதால், அரசு அதிகாரிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், மின்வாரியப் பணியாளர்களுக்குமென எல்லோருக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்கக் கோருகிறேன்.
ஆகவே, தென் மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் இப்பெருந்துயரில் பங்குகொண்டு நம் மக்கள் மீண்டுவர எல்லா வகைகளிலும் உதவிகளைச் செய்ய வேண்டியது அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரது கடமையாகும். கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஏற்பட்டப் பெருவெள்ளப் பாதிப்பின்போதும், வர்தா, கஜா புயல்களினால் ஏற்பட்ட பாதிப்புகளின் போதும், தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பெருவெள்ளப் பாதிப்புகளின் போதும், நம் மக்களுக்கு உணவு, உடை, போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டி, விளக்கு, சமையல் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அளித்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து மானுடம் போற்றியது போல் இத்துயர்மிகுந்த கொடிய சூழ்நிலையிலும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து துணைநிற்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
எனவே, பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நம் மக்களுக்கு தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இருகரங்களை நீட்டி உதவ வேண்டும் என அன்புரிமையோடு வேண்டுகிறேன். மானுடத்தோடு நம் மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கு உறுதிபூண வேண்டுமெனக் கோருகிறேன்.
குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் அதன் அருகமைந்த மாவட்டங்களைச் சார்ந்த எனதன்பு தம்பி, தங்கைகள் தங்களால் இயன்றளவு உணவுப்பொருட்கள், உடைகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உடனடியாகச் சேகரித்துக்கொண்டும், முறைப்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடம் நேரடியாக வழங்கி, இப்பெருந்துயரிலிருந்து மீண்டுவர அவர்களுக்கு ஆறுதல் கூறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.