உலகம் முழுவதும் பரவி வாழ்கிற என் தாய்த் தமிழ் உறவுகளுக்கு… வணக்கம்.
நிலமற்ற இனமும், நிர்வாண உடலும் அவமானகரமானது என என் உயிர் அண்ணன் நம் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் சொன்னது போல, ஒரு தேசிய இனம் தனக்கான எல்லாவித உரிமைகளுடன் கூடிய ஒரு தாயகத்தை என்று அடைகிறதோ, அன்றுதான் அதனை விடுதலைப் பெற்ற இனமாகக் கருத முடியும். அத்தகைய கொள்கை இலக்கான, மண்ணின் விடுதலையை அடைய தலைவர் வழி நின்று தன்னிகரற்ற போர் புரிந்து வரலாறு படைத்தவர்கள் நம் மாவீரர்கள். தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கனவு கண்ட தமிழீழச் சமவுடைமைக் (Socialism) குடியரசு நாட்டினை உருவாக்கிட விதையாய் விழுந்த மாவீரர்கள், உலகம் இதுவரை கண்டிராத வீரத்திற்கும், அறத்திற்கும் சான்றாய் ஆனவர்கள். தமிழீழ நாடு என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல. அது ஒரு கனவு தேசம். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, அனைத்தும் தாய் மொழியில் அமைந்து, தற்சார்புப் பொருளாதார வாழ்வோடு கூடிய பாதுகாப்பான வாழ்வு எனத் தலைவர் காட்டிய வழியில் தழைத்த விடுதலைப் பயிர். அதைக் கருக விடாமல், தன்னைக் கருக்கிக் காத்தவர்கள் நம் மாவீரர்கள்.
அத்தகைய மாவீரர் தெய்வங்களின் ஈகத்திருநாள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை 11 அன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் உளம் நெகிழ்ந்து நினைவுகூரப்படுகிறது. ‘மாவீரர் நாள்’ என்பது அழுது புலம்பும் நாள் அல்ல; அது தமிழீழத் தாயகம் விடுதலைப்பெற, ஆர்ப்பரித்து எழுந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை நினைவு கூறும் புனித நாள். பகை முடிக்க, படை நடத்தி தாயக விடுதலை என்கின்ற ஒற்றை இலக்கிற்காகக் குருதி சிந்தி, உயிரை விலையாகக் கொடுத்து வீரத்தின் இலக்கணமான மாவீரர்கள் நம் நெஞ்சம் முழுக்க நிறைகின்ற உணர்ச்சி நாள். பேரரசுவாத (ஏகாதிபத்திய) காரிருளை நீக்க, தங்களையே தந்த, நம் குலசாமிகளான மாவீரர்களை, இந்தக் கார்த்திகை மாதத்தில் நம் நினைவில் பொருத்தி எதிர்காலக் கொள்கைப் பாதைக்கு வழிகாட்டுகிற திருவிளக்குகளாக அவர்களை எண்ணிப் போற்றி வணங்குகிற பொன்னாள்.
அத்தகைய புனித திருநாளை தமிழர்கள் பெருமளவில் வாழும் தாய்த் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம்.அந்த வகையில் இந்த வருடம் வருகின்ற கார்த்திகை 11 ஆம் நாள் 27-11-2025 அன்று மாலை 4 மணியளவில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.