சென்னை பெருவெள்ளப் பாதிப்பினால் துயருற்றுள்ள நம் உறவுகள் மீண்டுவர துணைநிற்போம்!
தமிழகத்தின் தலைநகரமாகவும், மக்கள் அடர்த்தி மிகுந்த தொழில் நகரமாகவும் விளங்கும் சென்னை மாநகரத்தில் அதிகப்படியான மழைப்பொழிவு மற்றும் முறையான வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பெரும் வேதனையளிக்கிறது.
இயற்கைச்சீற்றத்தை எவராலும் தடுக்க முடியாதென்றாலும், அம்மழையை எதிர்கொள்வதற்குரிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது பேரவசியமாகும். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனை செய்யத் தவறி, தலைநகரத்தையே வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது.
ஒவ்வொரு ஆண்டும் வடிகால் அமைப்பதற்கென சில பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, வெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது அப்பட்டமான முறைகேடாகும். 2015ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காதுவிட்டு மக்களை வெள்ளப் பாதிப்பிற்குள்ளாக்கியது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியாகும்.
ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்பட்டப் பிறகுதான், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றுமென்றால், அது அரசின் நிர்வாகத் திறமையின்மையும், அலட்சியமும்தான் என்பதை எவராலும் மறுக்க முடியாது. எனவே, அரசை மட்டுமே நம்பியிராமல், தற்சமயத்தில் எல்லோரும் இணைந்து செயலாற்றினால்தான், இப்பேரிடலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும் என்பதால், அரசு அதிகாரிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், மின்வாரியப் பணியாளர்களுக்குமென எல்லோருக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்கக் கோருகிறேன்.
நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நாம் தமிழர் உறவுகளும் உடனடியாக களத்தில் இறங்கி, மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆகவே, நமது தலைநகரில் ஏற்பட்டிருக்கும் இப்பெருந்துயரில் பங்குகொண்டு நம் மக்கள் மீண்டுவர எல்லா வகைகளிலும் உதவிகளைச் செய்ய வேண்டியது அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் அனைவரது கடமையாகும். கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஏற்பட்டப் பெருவெள்ளப் பாதிப்பின்போதும், வர்தா, கஜா புயல்களினால் ஏற்பட்ட பாதிப்புகளின் போதும் நம் மக்களுக்கு உணவு, உடை, போர்வை, மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி, தீப்பெட்டி, விளக்கு, சமையல் பொருட்கள் போன்ற அத்தியாவாசியப் பொருட்களை அளித்து தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து மானுடம் போற்றியது போல் இத்துயர்மிகுந்த கொடிய சூழ்நிலையிலும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து துணைநிற்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
எனவே, பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்ற நம் மக்களுக்கு தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இருகரங்களை நீட்டி உதவ வேண்டும் என அன்புரிமையோடு வேண்டுகிறேன். மானுடத்தோடு நம் மக்களின் துயரில் பங்கேற்று அவர்கள் மீண்டெழ நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கு உறுதிபூண வேண்டுமெனக் கோருகிறேன்.